பாமக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் பெண் குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை... ஆற்காட்டில் ராமதாஸ் ஓபன் டாக்

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று ஆற்காட்டில் பாமக வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் ராமதாஸ் கூறினார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆற்காடு பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் அதிக வாக்கு உள்ளவர்கள் பெண்கள். அவர்களுக்கு ஆக்கும், காக்கும், அழிக்கும் சக்தி உள்ளது. அவர்கள் நினைத்தால் எதையும் மாற்ற வல்லவர்கள். அதிமுக கூட்டணி தெளிந்த நீரோடைபோல் உள்ளது. நான் டாக்டராக இருந்தாலும் விவசாயத்தை விடாமல் செய்தவன். அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விவசாய குடும்பத்தில் வந்தவர். அதனால் விவசாயிகளின் கஷ்டங்களை புரிந்து கொண்டு பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அதிமுகவுக்கு நாங்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்போம்.

தமிழகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பின்றி உள்ளார்கள். இதனால்தான் ஜெயலலிதா 1.1.2013 அன்று ஒரு அரசாணை கொண்டு வந்தார். அதேபோல் கடந்த 7.3.2019 அன்று ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையங்களை ஒன்றிணைத்து பெண்கள் பாதுகாப்புக்காக புதிய அமைப்பு ஏற்படுத்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய அரசாணை பிறப்பித்துள்ளார். வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ரயில்வே இணையமைச்சராக இருந்தபோது பல சாதனைகள் செய்துள்ளார். இங்கு வெற்றி பெற செய்தால் மேலும் பல சாதனைகளை நிறைவேற்றுவார். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, வாலாஜா பஸ் நிலையத்தில் ராமதாஸ் பேசுகையில், ஏ.கே.மூர்த்தி வெற்றி பெற்றால், வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 2 அல்லது 3 ஆக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாழான பாலாற்றை தூய்மைப்படுத்தி கோதாவரி, காவிரியுடன் இணைக்கப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: