அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் ரூ.1,500 அமைச்சர் ஜெயகுமார் மீதான புகார் குறித்து விளக்கம் கேட்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

சென்னை: அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் ரூ.1,500 ஆயிரம் கிடைக்கும் என அமைச்சர் ஜெயகுமார் பேசியது குறித்து திமுக அளித்துள்ள புகார் மீது மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்  விளக்கம் கேட்கப்பட்டு, அந்த விளக்கத்தின்  அடிப்படையில் நடவடிக்கை  எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலகத்தில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 2  நாட்களில் மக்களவை தொகுதிக்கு 30 பேரும், சட்டமன்ற தொகுதிக்கு 3 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நேற்று வரை ரூ.13 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியுடன் வைத்திருந்த துப்பாக்கிகள் 18,768 அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 3,563 குற்றவாளிகள் கண்காணிப்பு வளையத்திற்குள்  கொண்டுவரப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக 79 தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்துள்ளனர்.

அதேபோன்று, சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரி மதுமகாஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழகத்தின் அனைத்து தேர்தல் செலவுகளையும் கண்காணிப்பார். 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் அனைத்து  வங்கி அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, வங்கியில் இருந்து பணம் எடுத்துசெல்லும் போது ரிசர்வ் வங்கி என்ன உத்தரவு பிறப்பித்துள்ளதோ அதை சரியான முறையில் பின்பற்ற வேண்டும்  மற்றும் ரூ.10 லட்சத்திற்கு மேல் ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் குறித்து தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப செல்லும் போதும் முறையான ஆவணங்களுடன்  எடுத்துசெல்ல வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்யும் போது கூடுதலாக இரண்டு விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும். அந்த தகவல் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கும், தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அனுப்பிவைக்கப்படும்.

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவர்கள் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களை காட்டி  வாக்களிக்கலாம். அதிமுகவிற்கு ஓட்டு போட்டால் ரூ.1.500 ஆயிரம் கிடைக்கும் என அமைச்சர் ஜெயகுமார் பேசியது குறித்து அவர் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம்  விளக்கம் கேட்கப்பட்டு, அந்த விளக்கத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சமூக வலைதளங்களில் அரசியல் கட்சி தலைவர்களை கிண்டல் செய்வது போன்று வீடியோக்கள் வருகிறது. இதற்கு அனுமதி பெற  வேண்டுமா அல்லது அவர்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். டிவி, திரையரங்குகளில் வீடியோ வெளியிடுவது தொடர்பாக எங்களிடம் அனுமதி பெற வேண்டும். சமூக வளைதளங்களில் பரவும் இதுபோன்ற  வீடியோக்களின் மீது எங்களுக்கு புகார்கள் வராத பட்சத்தில் நாங்கள் ஏதும் செய்ய இயலாது.  இவ்வாறு கூறினார்.

சூலூர் தொகுதிக்கு இடைத்தேர்தலா?: சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மரணமடைந்துள்ளார். அதனால், அந்த தொகுதிக்கு மக்களவை தொகுதியுடன் சேர்ந்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். ஒரு தொகுதி  காலியாக உள்ளது என்று சட்டப்பேரவை செயலாளர், தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பார். அந்த தகவலை தலைமை தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்போம். தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல்  ஆணையம் தான் முடிவு செய்யும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: