கடந்த மாதம் புத்தம் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரே விலை ரகத்தில் வந்த ஹாரியர் கார், ஹெக்ஸா காருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை உணர்ந்து, ஹெக்ஸா காரின் விலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறைத்தது. எனினும், அதற்கு போதிய பலன் கிடைக்காது எனக்கருதி இப்போது ஹெக்ஸா காரில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து களமிறக்கி இருக்கிறது டாடா நிறுவனம். தோற்றத்தில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் வசதிகளுடன் இப்புதிய ஹெக்ஸா வந்துள்ளது. புதிய இரட்டை வண்ண கலவைகளில் டாடா ஹெக்ஸா அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ், எக்ஸ்டிஏ ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில், இந்த இரட்டை வண்ண கலவை தேர்வுகள் வழங்கப்படுகிறது. எக்ஸ்எம் வேரியண்ட்டில் இரட்டை வண்ண கலவை தேர்வு இல்லை. இதுதவிர்த்து, புதிய வடிவமைப்பிலான அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. 17 அங்குல சார்கோல் என்ற வண்ணத்திலான அலாய் வீல், எக்ஸ்டி, எக்ஸ்டி 4 வீல் டிரைவ் மாடல்களில் கிடைக்கும். மற்றொரு மாடலானது 19 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் எக்ஸ்டிஏ வேரியண்ட்டில் கிடைக்கும். புதிய 7 அங்குல திரையுடன்கூடிய ஹார்மன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.