புதிய தலைமை செயலக விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல் முறையீடு: விசாரணை 3 வாரம் தள்ளிவைப்பு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை 3  வாரங்களுக்கு உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து தி.மு.க.வின் அப்போதைய தலைவர் மறைந்த கருணாநிதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ரகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை முடக்கிவைத்து உத்தரவிட்டது. மேலும், ஆணைய விசாரணையில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

 இந்த உத்தரவின்படி, புதிய தலைமைச் செயலகம் கட்டியது தொடர்பான ஆவணங்களை   லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒப்படைத்து   கடந்த ஆண்டு செப்டம்பர் 24ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  விசாரணை ஆணையம் தனது விசாரணையை முழுமையாக முடிக்காத நிலையில், அதன் அடிப்படையில் அந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு மாற்றியது செல்லாது என்று கூறி இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: