துப்பாக்கி தோட்டாவைவிட சக்தி வாய்ந்தது வாக்குரிமை: வெங்கையா நாயுடு பேச்சு

சென்னை: ஓட்டுரிமை துப்பாக்கி தோட்டாவை விட மிகவும் சக்தி வாய்ந்தது என ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் நடந்த புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான காப்பக திறப்பு விழாவில்  துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். ஆவடி வேல்டெக் பல்கலைக்கழகத்தில் புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான காப்பகம் திறப்பு விழா நேற்று  நடந்தது. இந்த காப்பகத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்து பேசியதாவது: புதிய தொழில்நுட்பத்தின் மூலம் தொழில்முனைவோர்களை உருவாக்கி, அதன் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இன்னும் சில வருடங்களில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 3வது இடத்தை அடையும். கல்வி, வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல, அறிவு மற்றும் திறமையை  வளர்த்துக்கொண்டு, புதிய தொழில் முனைவோராக வர பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும், எந்த ஒரு அரசாங்கமானது 100% வேலைவாய்ப்புக்கு உத்திரவாதத்தை அளிக்காது.

கல்வியின் துணை கொண்டு புதிய தொழில் நுட்பத்தை அறிந்து தொழில் முனைவோராக வளர்ந்து, அதன் மூலம் மட்டுமே புதிய பொருளாதார வளர்ச்சியடைய முடியும்.  உங்களது ஓட்டு தான் நாட்டில்  பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

வாக்கு உரிமையானது துப்பாக்கி தோட்டாக்களை விட மிக பெரிய சக்தியாகும். இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். நமது நாட்டில் 50 சதவீதம் பேர் பெண்கள் தான் இருக்கின்றனர். அவர்களின் முன்னேற்றத்திற்காக அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். மேலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செயலாளர் மிட்டல், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பல்கலை கழக நிறுவனர் டாக்டர் ஆர்.ரங்கராஜன், நிறுவனத் தலைவர் டாக்டர் சகுந்தலா ரங்கராஜன், அறங்காவலர் குழுத்தலைவர் மகாலெட்சுமி கிஷோர், துணைத் தலைவர் கே.வி.டி.கிஷோர், வேந்தர் பிலாசத்தியநாராயணா, துணை தலைவர் டாக்டர் குமார் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: