பட்டாசு தொழிலாளர்களுக்கான மாற்று வழியை மத்திய அரசு கூற வேண்டும் : உச்சநீதிமன்றம்

டெல்லி : இந்தியா முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வரும் 15ம் தேதி மாசு குறைந்த பட்டாசுகளை தயாரிப்பது குறித்து பட்டாசு தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. அதிக மாசு ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாத தயாரிப்பு முறையை வகுக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையை முன்னிட்டு பட்டாசு வழக்கு விசாரணையை தள்ளிவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பட்டாசுகளை விட வாகனங்களின் புகையால் அதிகமாசு ஏற்படுவதாக கருத்து தெரிவித்தனர். மேலும் வாகன புகையை பற்றி பேசாமல் பட்டாசு மாசை மட்டும் குறைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். பட்டாசுக்கு மத்திய அரசு ஏன் தடை விதித்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பட்டாசு தொழிலை தடுப்பது என்றால் ஆலைக்கு வழங்கப்படும் விதியைத்தான் மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர். பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் வேலைவாய்ப்பை இழந்தவர்களுக்கு மாற்று வழி என்ன என்று மத்திய அரசு கூற வேண்டும் என உத்தரவிட்டுள்ளன.

வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத சூழ்நிலையில் பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும் என்றும், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை காலவரையன்றி நிறுத்தி வைக்க முடியாது என தெரிவித்தனர். பட்டாசு தொழிலாளர்களுக்கான மாற்று வழியை மத்திய அரசு கூற வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் பட்டாசால் ஏற்படும் காற்று மாசு மற்றும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறித்த அட்டவணை உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காற்று மாசு குறித்த அட்டவணையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்., 3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: