நீலகிரி வன கோட்டத்தில் மழை, காட்டு தீ அபாயம் நீங்கியது : வனத்துறையினர் நிம்மதி

ஊட்டி: நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், காட்டு தீ அபாயம் நீங்கியதாக வனத்துறையினர் கூறினர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி நான்கு மாதத்திற்கும் மேலாக உறைபனி நீடித்தது. இதனால் வனங்களில் உள்ள பெரும்பாலான செடி கொடிகள், சிறுசிறு மரக்கன்றுகள் காய்ந்து போயின. அதுமட்டுமின்றி பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால், காட்டு தீ ஏற்படும் அபாயம் நீடித்ததுடன் சில இடங்களில் காட்டு தீ ஏற்பட்டது. இதனிடையே, கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஏற்பட்ட காட்டு தீயால், சுமார் 95 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி தீயில் எரிந்து நாசமானது.

இதனை வனத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். இதில் மூலிகை செடிகள், சிறு சிறு விலங்குகள் பலியாகின. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மஞ்சூர், பென்ஸ்டாக், தங்காடு, காத்தாடிமட்டம், பெங்கால்மட்டம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் ஈரத்தன்மை அதிகரித்து காட்டு தீ ஏற்படும் அபாயம் தற்காலிகமாக நீங்கியுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர். மழை காரணமாக தேயிலை விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் வனப்பகுதிகளில் பசுமை திரும்பவும் வாய்ப்புள்ளது மட்டுமின்றி வன விலங்குகளின் குடிநீர் தேவையும் பூர்த்தியாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: