திருப்பூர் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை காட்சிப்பொருளாகிப்போன அவலம்

தாராபுரம்: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை காட்சிப்பொருளாக அவல நிலையில் கிடக்கிறது. தமிழக அரசு கடந்த 1965ம் ஆண்டு மாநிலம் முழுவதும் 12 அரசு கூட்டுறவு நூற்பாலைகளை துவங்க திட்டமிட்டு, கோவை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கூட்டுறவு நூற்பாலைகளை துவங்கியது. இவற்றில், இன்றைய கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்தபோது, தாராபுரம் கொளத்துப்பாளையத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில், கோவை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை துவங்கப்பட்டது. மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இங்கு, தரமான நூல் தயாரிக்க பொருத்தப்பட்ட 80 சதவீத இயந்திரங்கள் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. அங்கிருந்து வருகைதந்த தொழில்நுட்ப பொறியாளர்களால் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

தாராபுரம் என்றாலே மாவட்ட கூட்டுறவு நூற்பாலை என்ற பிரதான அடையாளமாக திகழ்ந்த இந்த ஆலையின் துவக்க காலத்தில் 300 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 11 ஆயிரம் கதிர்கள் உற்பத்தியானது. இதன்பின்னர் 1974ம் ஆண்டில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டு ‘’சிம்ளேக்ஸ் கோன் வைண்டிங்’’ பிரிவுகளில்  நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு 800 தொழிலாளர்கள், 25 ஆயிரம் கதிர்களுடன் தரமான நூல் உற்பத்தி நடைபெற்று வந்தது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க ரகமான 2+17 முருக்கு ரக மோட்டா நூல், சென்னிமலை, பெருந்துறை பகுதிகளில் இயங்கிவந்த பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கும், 40, 60, 80 போன்ற சன்ன ரக நூல்கள் வெளிமார்க்கெட்டிலும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டன. இக்கூட்டுறவு நூற்பாலையின் வளர்ச்சியின் பின்னணியில் கொளத்துப்பாளையம், கரையூர், குலுக்குப்பாளையம், மேட்டுவலசு, காளிபாளையம், தாராபுரம் பகுதிகளை சேர்ந்த 800 தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாகவும், 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்வு பெற்றன.

இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இங்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டது. இதனிடையே கடந்த 1985ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய ஜவுளிக்கொள்கை காரணமாக, சில குறிப்பிட்ட நூல் ரகங்களை உற்பத்தி செய்ய லைசென்ஸ் தேவையில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது. இது, ஏராளமானதனியார் நூற்பாலைகள் துவங்கப்பட காரணமாக அமைந்தது. தனியார் ஆலைகள் மூலம்கழிவு பஞ்சில் இருந்து மோட்டா ரக நூல் மட்டுமே உற்பத்தி செய்யவேண்டும் என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, சன்ன ரக நூல்களை உயர்தரத்துடன் உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு கொண்டுவரப்பட்டதால் தனியார் நூற்பாலைகளுடன் போட்டிக்கு தள்ளப்பட்டது.

அத்துடன், அன்றைய ஆட்சி நிர்வாகத்தில் இருந்த அதிகாரிகளின் தவறான கொள்கை காரணமாக, தரமற்ற நூலை உற்பத்தி செய்ததாலும், நிர்வாக சீர்கேடு காரணமாகவும் ஆலை நலிவடைய துவங்கியது. 38 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கிவந்த இந்த கூட்டுறவு நூற்பாலை கடந்த 2003-ம் ஆண்டில் இழுத்து பூட்டப்பட்டது. இதை கண்டித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. இதேபோல், மற்ற மாவட்டங்களில் இயங்கிவந்த மேலும் 7 கூட்டுறவு நூற்பாலைகளும் மூடப்பட்டன. கடந்த 2017-ம் ஆண்டு ஆலையில் இருந்த அனைத்து ஜப்பான் தயாரிப்பு இயந்திரங்களும் முன்னறிவிப்பின்றி இரவோடு இரவாக கடத்தப்பட்டன.

இந்த ஆலையை மீண்டும் புனரமைப்பு செய்து இயக்கவேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், கடந்த 16 ஆண்டுகளாக அரசு செவிசாய்க்கவில்லை. மூடுவிழா கண்ட 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நூற்பாலை தற்போது பாழடைந்து, வெறும் காட்சிப்பொருளாக கிடக்கிறது. எந்த தொழில்வளமும் இல்லாத தாராபுரம் தாலுகா பகுதி மக்கள் பயனடையும் வகையில் இந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டும் என தாராபுரம் பகுதி மக்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: