ஓசூர் வனப்பகுதியில் 15 யானைகள் தஞ்சம்

ஓசூர் : ஓசூர் அருகே போடூர்பள்ளம் வனப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. வறட்சி காரணமாக யானைகளை விரட்ட பட்டாசு வெடித்தால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால், இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனப்பகுதிக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி 100க்கும் மேற்பட்ட யானைகள் வருவதும், செல்வதுமாக உள்ளன. தற்போது ஓசூர் அடுத்த போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு 15க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இந்த யானைகளை விரட்ட வனத்துறையினர் தயக்கம் காட்டுகின்றனர்.

இதனால் வனப்பகுதியை ஓட்டிய கிராமங்களில் காய்கறி, மா, வாழை, பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானைகளை பட்டாசு வெடித்து தான் விரட்ட வேண்டியுள்ளது. ஆனால், வறட்சியின் காரணமாக வனப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், பட்டாசு வெடித்தால் தீ விபத்து ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் வனத்துறையினர் உள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டால் வனப்பகுதியில் உள்ள மரங்கள் மட்டும் எரியாது. அங்குள்ள பறவைகள், மான், முயல், பன்றி, குரங்கு உள்ளிட்டவைகளுக்கு ஆபத்து ஏற்படும். இதனால், ஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யானைகள் பல குழுக்களாக பிரிந்து, பகல் நேரங்களில் தண்ணீர் தேடி கிராமங்களில் உள்ள நீர்நிலைகளுக்கு செல்கின்றனர். குறிப்பாக தென்பெண்ணை ஆற்றின் கரையில் தஞ்சமடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: