கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து நாமக்கல் நீதிமன்றம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை : கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து நாமக்கல் சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த நிலையில் இருவரும் கோயிலுக்கு சென்றபோது 2015 ஜூன் 23ம் தேதி மாயமானார். இதுதொடர்பாக திருச்செங்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் 2015 ஜூன் 24ம் தேதி கிழக்கு தொட்டிப்பாளையம் ரயில் பாதை அருகே கோகுல்ராஜ் பிணமாக கிடந்தார். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜின் ஆட்கள் கோகுல்ராஜை கொலை செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோ ஆதாரங்களையும் சிபிசிஐடி போலீசார் கைப்பற்றினர்.

இந்த வழக்கு நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி சாட்சியம் அளிக்க கோகுலின் காதலி சுவாதி அழைக்கப்பட்டார். இதையடுத்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரான அவர், சம்பவத்தன்று தான் கோயிலுக்குச் செல்லவில்லை என்றும், கோகுல்ராஜ் தன்னுடன் படித்த மாணவர் என்ற அடிப்படையில் மட்டுமே தெரியும், சிபிசிஐடி போலீஸார் அளித்த காட்சிப் பதிவுகளை கொண்டு தன்னால் யாரையும் அடையாளம் காட்ட இயலாது எனவும் பிறழ் சாட்சியம் அளித்தார். இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி கோல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்கள் மிரட்டலால், அரசுத்தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி விட்டனர் என்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து நாமக்கல் சிபிசிஐடி பிரிவு, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: