டிசம்பர் 7ல் பெங்களூரு புறப்பட்டது பிரமாண்ட பெருமாள் சிலை பயணத்தில் தொய்வு: சூளகிரி அருகே 16வது நாளாக நிறுத்தம்

சூளகிரி:  சூளகிரி அருகே சாமல்பள்ளத்தில் பிரமாண்ட பெருமாள் சிலை 16வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலை, ராட்சத லாரியில் கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி புறப்பட்டது. வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி 16ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்தடைந்தது. அங்கிருந்து கடந்த 9ம் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாமல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது. அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், பாலத்தின் அருகே, புதியதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. நேற்று 16வது நாளாக சாமல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியை கடந்து விட்டால் சுமார் 2 கி.மீ., தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து, சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு இடங்களில் சிறு சிறு பாலங்கள் உள்ளன. இடையில் பல்வேறு இடங்களில் வனத்துறைக்கு சொந்தமான வழித்தடங்களை கடக்க வேண்டியுள்ளது. இதற்காக வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாமல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிலை புறப்பட்டு, சுமார் 3 மாத காலமாகியும் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாமல் ஏற்பட்டாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். சாமல்பள்ளத்தை கடப்பதற்கு அதிக நாட்கள் பிடித்துள்ளதால் பெருமாள் சிலை பயணத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: