எடப்பாடி, ஓபிஎஸ்சுக்கு ராமதாஸ் விருந்து : அமைச்சர் சண்முகமும் பங்கேற்றதால் பரபரப்பு

வானூர்:  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகளுக்கு பாமக தலைமை அலுவலகம் அமைந்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் விருந்து அளித்தார். நாடாளுமன்ற  தேர்தலையொட்டி தமிழகத்தில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது.  பாமகவுக்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபாவும் ஒதுக்கப்பட்டு, அதிமுக மற்றும்  பாமக இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதனை தொடர்ந்து நேற்றிரவு 9.10 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர்.    பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் முதல்வர், அமைச்சர்களை வரவேற்று விருந்தளித்தனர்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சி.வி.சண்முகத்தின் உதவியாளர் முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த சம்பவத்தில் இருந்து, ராமதாசுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது. ராமதாசை, அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும் எதிரும்-புதிருமாக இருந்து வந்தனர். இந்நிலையிலும், தற்போது பாமக அழைத்துள்ள விருந்தில் மாவட்ட அமைச்சரான சி.வி.சண்முகம் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

சி.வி.சண்முகமும் பாமக அளித்த விருந்தில் பங்கேற்றதால் அவருக்கு அன்புமணி ராமதாஸ் சால்வை அணிவித்து கட்டித்தழுவி வரவேற்றார். முதல்வர் வந்த வாகனத்துடன் 6 வாகனங்கள் மட்டுமே தைலாபுரம் தோட்டத்துக்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட மற்றும் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் வந்த வாகனத்தை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.   15 நிமிடம் கழித்து ஒரு சில நிர்வாகிகளை மட்டும் போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர்.

ஓபிஎஸ்சுக்காக 40 நிமிடம் காத்திருந்த எடப்பாடி:

திண்டிவனம் புறவழிச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகைக்காக ஜெக்காம்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் காத்திருந்தார். பின்னர் துணை முதல்வர் பன்னீர்செல்வம் சுமார் 8.50 மணியளவில் திண்டிவனம் வந்தார். 7.50 மணியளவில் திண்டிவனம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15 நிமிடம் மட்டும் மேடையில் இருந்தார். பின்னர் விருந்தினர் மாளிகை சென்ற முதல்வர், அமைச்சர் சண்முகம் ஆகியோர் துணை முதல்வருக்காக சுமார் 40 நிமிடம் காத்திருந்தனர். பின்னர் தைலாபுரம் வந்த முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 9.10 மணிக்கு ராமதாஸ் தோட்டத்திற்கு வந்தனர். தைலாபுரம் தோட்டத்திற்கு உள்ளே முதல்வர், துணை முதல்வர் சென்றதும் கட்சிக்காரர்கள் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், கட்சிக்கரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: