பிஎப் வட்டி விகிதம் திடீர் உயர்வு ... தேர்தல் வந்தாலே பாசம் பத்திக்கும்

புதுடெல்லி: மக்களவை தேர்தலை மனதில் வைத்தே மத்திய அரசு தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 2018-19 நிதியாண்டுக்கான தொழிலாளர்கள் வைப்பு நிதிக்கான வட்டியை 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக மத்திய தொழிலாளர் நலத்துறை உயர்த்தியுள்ளது. இதை ஒப்புதலுக்காக நிதியமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. 2014-15ம் ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.75 சதவீதமாக இருந்தது. இது ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்பட்டு, கூட்டப்பட்டு கடைசியில் கடந்த ஆண்டு 8.55 சதவீதத்தில் வந்து நின்றது. கடந்த ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதி ரூ.600 கோடி உபரியாக இருந்த போதும் வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்தது. இந்த ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதி ரூ.150 கோடிதான் உபரியாக உள்ளது. இருந்தும் 8.55 சதவீதத்தில் இருந்து 8.65 சதவீதமாக வட்டியை உயர்த்தியுள்ளது ஆச்சர்யமளிக்கிறது என்று தொழிலாளர்கள் கருதுகிறார்கள். மக்களவை தேர்தல் வரப்போவதை மனதில் வைத்தே மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேர்தல் காலங்களில் தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்ததே கிடையாது என்று ஆதாரத்துடன் சொல்கிறார்கள். 2014 தேர்தலுக்கு முன்பு 8.75 சதவீதம் உயர்த்தினார்கள். அதன் பிறகு 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டு அதை அப்படியே தொடர்ந்தார்கள். குறிப்பாக 1952ல் இருந்து எடுத்துக் கொண்டால் மக்களவை தேர்தல் வரும் போதெல்லாம்  தொழிலாளர் மீது பாசம் அதிகமாகி வைப்பு நிதிக்கான வட்டியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது குறிப்பி  டத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: