திருவொற்றியூர் அருகே சீரமைக்கப்படாத தரைப்பால சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே மணலி சாலையில் தரைப்பாலம் அமைத்த இடத்தில் சாலையை சீரமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

திருவொற்றியூர் - மணலி சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. இச்சாலை வழியாக மணலி,  மாத்தூர், மாதவரம் போன்ற பகுதிகளுக்கு தினமும் மாநகர பேருந்து,  கார், பைக் போன்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.  இச்சாலையில் எம்ஜிஆர் நகர் அருகே மழைநீர் செல்வதற்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறிய தரைப்பாலம் கடந்த 2 மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து பல நாட்கள் ஆகியும் இதுவரை அந்த இடத்தில் சாலையை சீரமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர்.  இதனால் அங்கு சாலை குண்டும் குழியுமாக மாறி, சுமார் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இப்பகுதியில் கருங்கற்களும் சிதறிக் கிடப்பதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பலர் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், இந்த சாலையை சீரமைக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘மழைநீர் செல்வதற்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி தரைப்பாலம் அமைத்த பின்னர் சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் பைக்கில் 2 குழந்தைகளுடன் வந்த தம்பதி இந்த கருங்கற்களில் சறுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். ஆனால் பெரிய விபத்து ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபோல், பலர் தினசரி விபத்தில் சிக்குகின்றனர்.  இதுபற்றி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அசம்பாவிதங்களை தடுக்க உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: