புல்வாமாவில் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த காயத்தை பொருட்படுத்தாமல் சண்டைக்கு புறப்பட்ட தளபதி: விடுமுறையை ரத்து செய்து ஆவேசம்

ஸ்ரீநகர்: காயம் அடைந்து வீட்டில் இருந்த படைத்தளபதி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு விடுமுறையை ரத்து செய்து விட்டு சென்று தலைமை தாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் தீவிரவாதிகள் மீது கடும் கோபத்தில் உள்ள பாதுகாப்பு படைகள், அவர்களை வேட்டையாடி வருகின்றன. நேற்று முன்தினம் காலை புல்வாமாவில் தீவிரவாதிகள் பதுங்கிருப்பதாக தகவல் கிடைத்ததும், ராணுவம் அப்பகுதியை சுற்றிவளைத்தது. அப்போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பிரிகேடியர் ஹர்பீர் சிங் காயமடைந்தார். இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். அதேபோல், டிஐஜி அமித் குமாரும் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக நள்ளிரவில் மீண்டும் தாக்குதல் தொடங்கப்பட்டதை கேள்விப்பட்ட இருவரும், தங்களின் காயத்தை பொருட்படுத்தாமல், தங்களுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ரத்து செய்து விட்டு தாக்குதல் இடத்துக்கு விரைந்தனர். அப்பகுதிக்கு பிரிகேடியர்ஹர்பீர் சிங்தான் படைத்தளபதி என்பதால், அவரை பார்த்ததும் வீரர்கள் புது உத்வேகம் அடைந்தனர். ஹர்பீரும் துப்பாக்கியை ஏந்தியபடி வீரர்களுக்கு தலைமை தாங்கி தாக்குதலை நடத்தினார். 17 மணி நேரம் நடந்த தாக்குதலில், புல்வாமா சம்பவத்திற்கு மூளையாக இருந்த ஜெய்ஷ் இ முகமது தளபதி உட்பட 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: