மழைநீர் கால்வாய், சாலை அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர்: கத்திவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாய், சாலை அமைக்காத மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 2வது வார்டுக்கு உட்பட்ட கத்திவாக்கம் நேரு நகர் மற்றும் பஜனை கோயில் தெருவில் 15க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தெருக்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட காலமாக பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால், பொதுமக்கள் வீடுகளில் செப்டிக் டேங்க் அமைத்து அதில் கழிவுநீரை தேக்கி, பின்னர் அதை லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கழிவுநீர் தெருவில் உள்ள திறந்தவெளி கால்வாயில் விடப்படுகிறது. இந்த திறந்தவெளி கால்வாயை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகள் முறையாக பராமரிப்பதில்லை. இதனால்,  பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து, சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, வீட்டின் அருகே குழந்தைகள் விளையாடும் போது, இந்த திறந்தவெளி கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளது.

மேலும், இங்குள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கபடாமல் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக அவசர காலத்தில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட வர முடியாத அவலம் உள்ளது. எனவே, இந்த கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று நேரு நகர் தெருவில் திரண்டு, கால்வாய் மற்றும் சாலைகளை சீரமைக்காத அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எண்ணூர்  போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையேற்று, போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: