1,500 கோடி வாடகை பாக்கி வாடகைதாரரின் பெயர் பட்டியலை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும்: செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: வாடகை பாக்கி வைத்திருப்பவரின் பெயர் பட்டியலை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டும் என்று செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலமான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள், 22,600 கட்டிடங்கள், 33,665 மனைகள் உள்ளன. இந்த கட்டிடங்கள், நிலங்களை வாடகை, குத்தகைக்கு எடுத்தவர்கள் பெரும்பாலானோர் பாக்கி வைத்துள்ளனர். அவர்கள், 15 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தவில்ைல.  குறிப்பாக, 1.500 கோடி வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த பாக்கி தொகையை வசூலிக்கும் வகையில், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஆனால், அதற்கும் அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதை தொடர்ந்து, வாடகை பாக்கி செலுத்தாதவர்களை ஆக்கிரமிப்பாளராக கருதி அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், வாடகை பாக்கி செலுத்தாத நிலையில் அறநிலையத்துறைக்கு எதிராக பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். குறிப்பாக, ஒவ்வொரு மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் குறைந்தது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் 20 ஆயிரம் வழக்குகள் தற்போது வரை உள்ளன. இதனால், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து பாக்கி ெதாகையை வசூலிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வாடகை பாக்கி வைத்திருக்கும் வாடகைதாரர்கள் தொடர்பான பெயர், பாக்கி தொகை உள்ளிட்ட பட்டியல் விவரங்களை கோயில் வளாகத்தில் வைக்க அறநிலையத்துறை அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இணை ஆணையர், ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கின் பேரில் சீல் வைக்க உத்தரவிட்டிருந்தால் உடனடியாக ஆக்கிரமிப்பாளரை அகற்றவும் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன் பேரில் தற்போது ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பாளரை அகற்றிய பிறகு, உடனடியாக அந்த மனை, கட்டிடங்களை பொது அறிவிப்பு வெளியிட்டு, ஏலம் விடவும் கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: