ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் கிராமத்தில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம்: ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வரும் பொதுமக்கள், விவசாய பம்பு செட்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆணையன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 30,000 கொள்ளளவு கொண்ட  நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் ஆணையன் தெரு, வளையல் கார தெரு, காணிக்கைபுரம் மேற்கு ரோட்டுத் தெரு உள்ளிட்ட தெருக்களை சேர்ந்த 200 குடும்பத்தினர் பயன்பெற்று வந்தனர். இந்த நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து அதிலிருந்த தண்ணீர் கசிந்து வந்தது.

இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக இந்த நீர்த்தேக்க தொட்டி மின்மோட்டார் பழுதடைந்து போர்வெல் உள்ளே விழுந்து விட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை போர்வெல் உள்ளே இருக்கும் மின் மோட்டாரை வெளியே எடுத்து சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து அலட்சியமாக இருந்து வருகின்றனர்.  இதனால் குடிநீர் கிடைக்காமல் மூன்று மாதங்களாக கிராமத்தின் அருகில் உள்ள விவசாய பம்பு செட்டுகளில் தண்ணீர் எடுத்து வருகின்றனர். பல நேரங்களில் விவசாய பம்பு செட் உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்து செல்ல தடை விதிக்கின்றனர். விவசாய நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது, மேலும், அனைத்து தரப்பு மக்களும் இங்கு தண்ணீர் எடுத்தால் மேலும், பற்றாக்குறை ஏற்படும் என்றும், இல்லையெனில் வயலில் பணி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால் தினமும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் மின்பவர் நீர்த்தேக்க தொட்டி, மார்க் 2 கைப்பம்பு ஆகியவையும் இல்லை. குடிநீர் பிரச்னையால் பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு பணியாளர்கள் உள்ளிட்டோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடிவதில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள், முதியவர்கள் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுக்க வர முடியவில்லை என்றும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அனைத்து கிராம மக்களுக்கும் அத்தியாவசிய தேவையான தண்ணீர் தினமும் வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் எங்கள் பகுதியில் கடந்த 3 மாதங்களாக போர்வெல் மின் மோட்டார் பழுதடைந்து தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக நாங்கள் திண்டாடி வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மின்மோட்டாரை உடனடியாக சீரமைத்து போர்வெல் இயங்க செய்ய வேண்டும், நீர்த்தேக்க தொட்டியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் கசிவை சீர்படுத்த வேண்டும். மேலும், அடிக்கடி ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மின்பவர் நீர்த்தேக்க தொட்டி, மார்க் 2 கைப்பம்பு  புதியதாக ஏற்படுத்த வேண்டும். அதுவரை லாரி மூலமாக கிராம மக்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: