ரபேல் ஒப்பந்த பேரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடி தலையீடு : ராகுல் மீண்டும் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்த பேரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ₹59 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்த பேரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டதாக ராணுவம் குற்றம்சாட்டிய கடிதத்தை ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இது பற்றி டெல்லியில் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டி: ரபேல் விமான ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்த போது, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலையும் மீறி, பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டுள்ளது. இதை பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் எதிர்த்தனர் என்று ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் தனிப்பட்ட மனிதர்கள் சிலர் ஆதாயம் பெறுவதற்காக மோடி பேரம் நடத்தி இருக்கிறார் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பிரதமர் ஒருவர் நேரடி பேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதுவரை யாரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது கிடையாது.  ஆனால், மத்திய அரசும் அம்பானியும் போர் விமான கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அனைவருக்கும் இந்த உண்மையை உணர்த்துவதற்காகத்தான் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. பிரதமர் மோடி ரூ.30,000 கோடியை திருடி, அனில் அம்பானியிடம் கொடுத்துள்ளார்.

இதைத்தான் கடந்த ஒரு வருடமாக கூறி வருகிறேன். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில், தன்னை காவலாளி என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி திருடனாகி இருப்பது தெளிவாகிறது. இந்திய ராணுவத்தில் உள்ள அனைவருக்கும் இதனை தெரிவிக்க உள்ளேன். மக்கள் பணத்தை எடுத்து தனது நண்பருக்கு பிரதமர் மோடி தானம் செய்துள்ளார். சட்டத்தை அமல்படுத்த, யார் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அது ராபர்ட் வதேராவாகட்டும் அல்லது முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரமாகட்டும். அதே நேரம், ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான எனது கேள்விகளுக்கு பிரதமர் 5 நிமிடங்கள் மட்டும் பதில் கூறட்டும். பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டால்தான் ரபேல் விமானத்தின் விலை உயர்ந்தது என்பது பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளின் கடிதம் மூலம் அம்பலமாகி இருக்கிறது. ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் தகவல்களை அளித்துள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.

தலைவர்கள் அதிர்ச்சி:

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டதாக வெளியான தகவல் பற்றி பல்வேறு தலைவர்கள் கூறிய கருத்துகள்:

முன்னாள்  பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி: ராணுவ ஒப்பந்த பேச்சுவார்த்தையில், பாதுகாப்புத் துறை தலையீடு மட்டுமே இருக்கும். ஆனால், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது  அதிர்ச்சியாக உள்ளது. இந்திய வரலாற்றில் இதுபோல் நடந்ததில்லை. இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் சிறப்பு கவனம் செலுத்தியது ஏன்? யாருக்கோ  உதவுவதற்கு அவர்கள் விரும்பியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி டிவிட்டரில் விடுத்துள்ள பதிவு: ரபேல் ஒப்பந்தத்தில்  தொழிலதிபர் நண்பர் பயன் அடைவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தை பிரதமர் மோடி  தொடர்ந்து அலட்சியப்படுத்தி உள்ளார். அவரது செயல்படுகளால் அரசுக்கும்,  நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைகள்  உச்ச நீதிமன்றத்தில் மறைக்கப்பட்டு விட்டன. அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கு  பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர்  அப்துல்லா டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி: ரபேல் விவகாரத்தில் பிரதமர்  அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி அப்போதைய பாதுகாப்புத்  துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எதுவுமே தெரியாமல் இருந்துள்ளார். பிரதமர்  அலுவலகம், பிரான்ஸ் அதிபரின் அலுவலகம் ஆகிய இரண்டும்தான் இந்த  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

பாஜ கருத்து

ரபேல் விவகாரம் குறித்து ராகுல் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த மத்திய  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘ராகுலின் பொய் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, மற்றொரு பொய்யை கூறுகிறது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் முற்றிலும்  நிராகரிக்கிறோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: