தேசிய குடற்புழு நீக்க தினம் : குமரியில் 6.15 லட்சம் குழந்தைகளுக்கு இன்று அல்பண்டோசால் மாத்திரை விநியோகம்

நாகர்கோவில்: தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு ‘அல்பண்டோசால்’ மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை களைவதற்கு வருடத்திற்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன்சுத்தம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.

இந்த வருடம் பிப்ரவரி 8ம் தேதி (இன்று) 1 முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பண்டோசால் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை முழுமையாக நல்லமுறையில் செயல்படுத்தும் பொருட்டு சுகாதாரத்துறை, கல்வித்துறை மற்றும் ஊட்டச்சத்து துறை இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 1 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மையத்திலும், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு பள்ளிகளிலும் வைத்து மதிய உணவுக்குப்பின் ஒரு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும். குமரி மாவட்டத்தில் சுமார் 6 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் பயனடைவர். இம்மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மாத்திரை வழங்கப்படும் தினத்தில் உடல் நலக்குறைவோ அல்லது மற்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகளுக்கு 14.2.2019 அன்றும் மாத்திரை வழங்கப்படும். எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதனை உறுதிபடுத்தி அவர்களது நல்வாழ்விற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: