அம்பத்தூர்-செங்குன்றம் இடையே சாலையை ஆக்கிரமிக்கும் வியாபாரிகள் : விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

அம்பத்தூர்: அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டி உள்ளதோடு வாகனங்களை நிறுத்தி இருப்பதால் பாதசாரிகள் விபத்தில் சிக்குகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக, குற்றம்சாட்டு எழுந்துள்ளது. அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை சிடிஎச் சாலை மற்றும் கொல்கத்தா நெடுஞ்சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் உள்ளது. இந்த சாலையில் அரசு நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், திருமண மண்டபங்கள், சாப்ட்வேர், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இதனால், இந்த சாலையை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக இந்த சாலையில்  புதிதாக பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உருவாகி வருகின்றன. இதனால் சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இச்சாலையில் போக்குவரத்து அதிகமானதால் அம்பத்தூர் முதல் கள்ளிகுப்பம் வரை இந்த சாலை விரிவுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, புழல் வரை சாலை விரிவாக்கம் செய்யாமல் கிடப்பில் கிடப்பதால் இச்சாலையில் அம்பத்தூர் முதல் புழல் வரை பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து உள்ளதால் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் பாதசாரிகள் நடந்து செல்ல வேண்டிய இடங்களில் வர்த்தக நிறுவனங்களின் முன்பு  வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

 

இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனம் முன்பு நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சாலையில் தான் நிறுத்தப்படுகின்றன. சாலையை ஆங்காங்கே ஆக்கிரமித்து டிபன் கடைகள், தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலை ஓரத்தில் உள்ள மெக்கானிக் செட்டுகளுக்கு பழுது பார்க்க வரும் வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று பழைய பேப்பர், இரும்பு கடைகளிலும் சாலையை ஆக்கிரமித்து கழிவுகள் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளன. திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்களுக்கு வருபவர்கள் சாலை ஓரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், பொக்லைன், லாரிகள் உள்பட கனரக வாகனங்களும் சாலையை ஆக்கிரமித்து ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்வதால் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதே சாலையில் தான் அம்பத்தூர் போக்குவரத்து போலீஸ் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இருந்தபோதிலும், போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு வாங்கிக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அம்பத்தூர்- செங்குன்றம் நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாதசாரிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: