போராட்டம் நடத்தி வரும் அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு: கருவூலங்களுக்கு கடிதம்

சென்னை: அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க கருவூலங்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு எச்சரிக்கை விடுத்தும் போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று 8வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. மாறாக தலைமை செயலாளர் மூலம் அரசு மிரட்டி வருவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என தமிழக தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு துறை செயலாளர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுக்கு சம்பளத்தை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் சம்பளம் பட்டுவாடா செய்யப்படுகிறது. வழக்கமாக மாத இறுதி நளில் அந்த மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

 இதன்படி ஜனவரி மாதத்துக்கான சம்பளம் வரும் நாளை ஊழியர்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் கருவூல அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு ஊழியர்களுக்கு 31.01.2019 அன்று வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கும்பகோணம் கருவூலத்தின் மூலம் மட்டும் வழங்க வேண்டிய ரூ.9,93,05,555 சம்பள தொகையை பட்டுவாடா செய்யாமல் நிறுத்தி வைக்க கருவூல அதிகாரிக்கு வங்கியில் இருந்து  நேற்று கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வராத நாளில் சம்பளத்தை வழங்கக்கூடாது, ஒழுங்கு நடவடிக்கை என அரசு அடுத்தடுத்த அஸ்திரங்களை பிரயோகித்து வரும் நிலையில், வேலை பார்த்த மாதத்துக்கே சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியாயமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் அரசு செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போராட்டம் தொடரும் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

சென்னையில் நேற்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் நலன், மாணவர்கள் நலன் கருதி முதல்வர் எங்களை அழைத்து பேசினால் போராட்டத்தை கைவிட தயார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என்று அரசு தரப்பில் இருந்து திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடரும். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும். தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்றைய போராட்டம் இருக்கும். முதல்வர் சுயநலத்துடன் போராட்ட வேண்டாம் என்று தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார். நாங்கள் யாரும் சுயநலத்துடன் போராடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். நாளை மாலை 200 சங்கங்களின் உயர்குழுகூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: