உ.பி.யில் 16 மாதங்களில் 3,000 என்கவுன்ட்டர்கள்: யோகி ஆதித்யநாத் அரசின் சாதனைப் பட்டியல் வெளியீடு

லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்ற 16 மாதங்களில் 3000க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, அதில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் 16 மாதங்களை கடந்து ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு உத்திரப்பிரதேச அரசு சாதனை பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் அரசு செய்த என்கவுன்ட்டரையும் இணைத்துள்ளது. முன்னதாக, அனைத்து துறைகளின் சாதனைகள் குறித்த விவரத்தை அனுப்பி வைக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உ.பி., தலைமை செயலாளர் அனுப் சந்திர பாண்டே உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து அனைத்து துறைகளின் சாதனைகள் குறித்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் உ.பி., காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்ற 16 மாதங்களில் 3000க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 78 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7,043 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 838 குற்றவாளிகள் காயமடைந்துள்ளனர். 11,981 குற்றவாளிகளின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் சரணடைய வைக்கப்பட்டுள்ளனர். சிறப்பு காவல் படையினரால் 9 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 4 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: