உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வானூர்தி பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்

சென்னை: சென்னையில் நடைபெற்றுவரும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் வானூர்தி பாதுகாப்பு கொள்கையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.  2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும், நாளையும் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடக்கிறது.  இந்த மாநாட்டையும், கண்காட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

உலகம் முழுவதும் வணிகம் செய்த தமிழர்கள்

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பல நூற்றாண்டுகளாக தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி இடம் வகிக்கிறது. உலக முதலீட்டார்கள் மாநாடு என்பது ஒரு நல்ல முயற்சி. பல நாடுகளுக்கு சென்று தமிழர்கள் தொழில்துறையில் முத்திரை பத்தித்துள்ளனர். உலகம் முழுவதும் வணிகம் செய்த வரலாறு தமிழர்களுடையது. கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கல்வெட்டுகள் தமிழர்களின் வணிகம் பற்றி கூறுகின்றன.

நாட்டின் மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி

மின்னணு நிர்வாகம், காலநிலை மாற்றம் ஆகியவற்றிலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. சூரிய மின்னுற்பத்தி உள்ளிட்ட தூய எரிபொருள் துறைகளில் இந்தியா சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழகம் தற்போது மின் மிகை மாநிலமாக திகழ்வது தொழில்துறையினருக்கு வரப்பிரசாதம். பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி மூலம் நாடு முழுவதும் ஒரே சந்தை ஒரே விலையாக மாற்றப்பட்டிருக்கிறது. தொழில்புரிவதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்திய வேகமாக முன்னேறி 77வது இடத்திற்கு வந்துள்ளது. அறிவுசார் சொத்து தொடர்பான வர்த்தகத்தில் இந்தியா சிறந்து விளங்குவதாக ஐநா தொடர்புடைய அமைப்புகள் கூறுகின்றன. இந்தியாவின் இ கவர்னன்ஸ் சிஸ்டத்தையும் ஐ.நா பாராட்டுகிறது.

பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் இந்தியா

தமிழக மாணவர்கள் மற்ற நாடுகளின் மொழிகளை கற்பதன்மூலம் வணிகம், வேலைவாய்ப்பை பெறலாம். திறன் வளர்ப்பு பயிற்சிகளில் மற்ற மொழிப் பயிற்சியையும் சேர்த்து வழங்கினால் மாணவர் பயனடைவர். தொழில் முனைவோருக்கு சரியான அடித்தளத்தை தமிழகம் அமைத்து தருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. நாட்டின் பணவீக்கம் மிகச்சிறப்பான முறையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7 விழுக்காடாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்துள்ளது. விவசாயம், தொழில்துறை என பலவற்றிலும் தமிழகம் சாதகமான சூழலை கொண்டுள்ளது

தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம்

ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடம் இரண்டை மத்திய அரசு உருவாக்குகிறது. அவற்றில் ஒன்று தமிழகத்தில் அமைகிறது. சென்னை, சேலம், ஒசூர், கோவை, திருச்சி ராணுவ தளவாட வழித்தடத்தில் முதலீடுகளை வரவேற்கிறோம். முதன்முறையாக டெல்லிக்கு பிறகு தமிழகத்தில் ராணுவத்தளவாடக் கண்காட்சி அண்மையில் நடந்தது. தொழில்துறையில் முன்னேற தமிழக அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: