தேர்தல் விளம்பரங்கள் கொடுப்பவர்கள் யார்? : மார்ச் முதல் தகவல் வெளியிடுகிறது கூகுள்

புதுடெல்லி: தனது இணையதளத்தில் வெளியிடப்படும் தேர்தல் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை கொடுத்தது யார்? என்பது உள்ளிட்ட தகவல்களை வெளியிட உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.மக்களவைக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் கூகுள் போன்ற இணையதளங்களிலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.

ஆனால், இந்த விளம்பரங்களை யார் கொடுக்கிறார்கள்? இதற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்ற விவரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்குவது இல்லை. இது, தேர்தலை சந்திக்கும் பல்வேறு நாடுகளில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூகுள் நிறுவனம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக நேற்று அது வெளியிட்ட அறிக்கையில், ‘இணையதளம், வலைதளங்களில் வெளியாகும் தேர்தல் விளம்பரங்கள் பற்றிய வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதால், இந்த விளம்பரங்களை கொடுப்பது யார்? அதற்கான தொகை போன்ற விவரங்கள் மார்ச் முதல் வெளியிடப்படும். இதற்காக,   ‘இந்திய தேர்தல் விளம்பர வெளிப்படைத்தன்மை அறிக்கை’ என்ற பகுதியும், இந்த தகவல்கள் அடங்கிய ‘விளம்பர தொகுப்பு’ம் தொடங்கப்படும். இதில், தேர்தல் விளம்பரங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் மக்கள் தெரிந்து கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்களை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவை ஏற்கனவே தொடங்கி விட்டன. விளம்பரம் கொடுப்பவர்கள், அவர்களின் முகவரி போன்ற தகவல்களை வழங்கும்படி பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதம் முதல் வலியுறுத்தி வருகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: