மதுரை அருகே பஸ் பாஸ் செல்லாது எனக் கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் இறக்கி விட்ட கண்டக்டர்: மன்னிப்பு கேட்கும் பேச்சு வைரல்

திருப்பரங்குன்றம்: அரசு வழங்கிய பஸ் பாஸ் செல்லாது என கூறி கல்லூரி மாணவியை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.மதுரை, திருப்பரங்குன்றம் அருகே புளியங்குளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் மகாலட்சுமி, மதுரை மீனாட்சி அரசு பெண்கள் கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ படித்து  வருகிறார். இவர் ஜன. 18ம் தேதி கல்லூரியில் இருந்து வீடு திரும்ப திருமங்கலம் சென்ற அரசு பஸ்சில் கோரிப்பாளையம் நிறுத்தத்தில் ஏறி உள்ளார். மாணவியிடம் கண்டக்டர் டிக்கெட்  வாங்கும்படி கூறியுள்ளார். மாணவி, பஸ் பாஸை காண்பித்துள்ளார். ‘அரசு வழங்கிய பஸ் பாஸ் எல்லாம் இப்போது செல்லாது’ என கண்டக்டர் கூறியுள்ளார். ‘நான் அரசு கல்லூரியில் படிக்கிறேன்’ என கூறி அடையாள அட்டை மற்றும் பாஸ் ஆகியவற்றை  கண்டக்டரிடம் மாணவி காண்பித்துள்ளார். ஆனால், அதை காதில் வாங்காமல், மாணவியை திட்டி அவரை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து, மாணவி  நீண்டநேரம் காத்திருந்து வேறு பஸ் பிடித்து மிகத் தாமதமாக வீடு திரும்பினார்.பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோருடன் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் உள்ள அலுவலகத்திற்கு சென்று அலுவலர் சுந்தரபாண்டியிடம் முறையிட்டுள்ளார். அவரும் மாணவியை திட்டி,  உசிலம்பட்டிக்கு சென்று முறையிடுமாறு அலட்சியமாக பதிலளித்தாராம்.

இதையடுத்து, அவர்கள் உசிலம்பட்டி சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள் திருமங்கலம் டெப்போ மேலாளரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தியதை தொடர்ந்து திருமங்கலம் கிளை மேலாளரிடம் மாணவி புகார்  அளித்துள்ளார். விஷயம் பெரிதாவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கண்டக்டர், பாதிக்கப்பட்ட மாணவியின் தாயாரிடம் செல்போனில் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார். அதற்கு மாணவியின் தாய்,  ‘‘ஒரு பொம்பளப் பிள்ளையை ரோட்டில் இறக்கி விட்டது சரியா? இல்லை எனக் கூறுங்கள். விட்டு விடுகிறோம். உங்கள் அம்மா, தங்கச்சியை இப்படி இறக்கி விடுவீர்களா? ஏதாவது ஆனா எனக்கு  பிள்ளை கிடைக்குமா? ெகாதித்துப்போய் உள்ளேன்...’’ என கடும் கோபமாக பதிலளிக்கிறார்.இதையடுத்து கண்டக்டர், ‘தினமும் உங்கள் பிள்ளை என் பஸ்சில் தான் வரும். நான் இதுவரை பாஸ் கேட்டதில்லை. செக்கர் ஏதும் சொல்வார் என நினைத்து தான் சொன்னேன். அடுத்த வண்டியில் ஏறி  வா என சொன்னது தப்பு தான். சாரி அம்மா. இந்த ஒரு தடவை மன்னித்துக்கொள்ளுங்கள்’ என கெஞ்சி பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பஸ்  பாஸ் இருந்தும் செல்லாது எனக்கூறி மாணவியை நடுவழியில் கண்டக்டர் இறக்கிவிட்ட சம்பவம் மதுரை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: