மத்திய அரசின் புதிய மின்சட்டத்தின் மூலம் இலவச மின்சாரம் திட்டத்துக்கு ஆபத்து

*விவசாயிகள், ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்

* தொழிற்சங்கத்தினர் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய அரசு ‘மின்விநியோக சட்டத்திருத்தம்-2018’யை செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் பொதுமக்கள்  கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று மின்வாரிய தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதாவது தற்போது விவசாயிகளும், நெசவாளர்களும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை இலவசமாக பெற்று வருகின்றனர். அதேபோல், அனைத்து வீடுகளுக்கு முதல், 100 யூனிட் மின்சாரம்  இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ‘செக்’ வைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட சட்டத்தை மத்திய அரசு  நிறைவேற்றக்கூடாது என அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மின்கழக தொழிலாளர் முன்னேற்றச்சங்க பொதுச்செயலாளர் சிங்கார இரத்தினசபாபதி கூறியதாவது: மத்திய அரசின் புதிய மின் சட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக இலவச மின்சாரம் பெறும் விவசாயிகள், 21  லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆங்காங்கு குடிசைகளில் வசிக்கு, 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். தற்போது மின்வாரியத்தில் இருந்து மின்சாரத்தை  உடனடியாக பெற முடிகிறது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அவ்வாறு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத்தலைவர் சுப்ரமணியம் கூறுகையில், ‘‘மின்சார உற்பத்தியைப்போல, மின் விநியோகமும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் குடிசை வீடுகள், விவசாயம், நெசவுக்கு வழக்கப்படும் இலவச மின்சாரம் நிறுத்தப்பட்டு, கட்டண நிர்ணயம் மற்றும் வசூல் தனியார் வசமாகிவிடும். மேலும் இச்சட்டம் நடைமுறைக்கு  வந்த பிறகு, மக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சார பயனீட்டுக்கான மானியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முன்னதாக முழு கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டிய நிலை  ஏற்படும். அதேபோல் இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், மூன்றாண்டுகள் வரை தான் இலவசங்களுக்கும், மானியங்களும் அனுமதி வழங்கப்படும், அதன் பிறகு அவை அனைத்தும் ரத்து  செய்யப்பட்டு விடும். இதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் ஏற்படும். எனவே இச்சட்டத்தை அமல்படுத்த கூடாது என்பதற்கு, தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’  என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: