மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம் அரசனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜீவா, தனது வீட்டின் பின்புறம் கிடந்த கம்பிகளை எடுத்து வைக்கும்போது, மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருப்புவனம் மடப்புரம் கிராமத்தை சேர்ந்த மலர்விழி மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருச்சி மாவட்டம், வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்த ஜார்ஜ், விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவல்குடி கிராமத்தை சேர்ந்த சுசீலா மற்றும் கருவன்குடியிருப்பை சேர்ந்த சக்திவேல் ஆகிய இருவரும் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் காவலூர் கிராமத்தை சேர்ந்த மூக்காயி, மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஒரத்தநாடு வட்டம், பேய்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், விவசாய நிலத்திற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம் அழகிரிபாளையம் கிராமத்தை சேர்ந்த குமார், தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏசுதாஸ், கிராம துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணி மேற்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கரூர் மாவட்டம் மகாதானபுரம் வடக்கு கிராமத்தை சேர்ந்த தேக்கமலை, ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். குளித்தலை வட்டம், சிங்காரத் தோப்பை சேர்ந்த இம்ரான்கான், பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன், மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெய்னூர் கிராமத்தை சேர்ந்த சந்தீப், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் வைப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்சாரம் தாக்கி பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: