ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஷட்டர் பழுதடைந்ததால் விவசாய நிலத்தில் வீராணம் தண்ணீர் புகுந்தது

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் ஷட்டர் பழுதடைந்ததால் விவசாய நிலத்தில் வீராணம் தண்ணீர் புகுந்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் இருந்து லால்பேட்டை வரை 16 கி.மீட்டர் நீளம் கொண்ட வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கனஅடி ஆகும். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக இங்கிருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது. ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புடையூர் பகுதியில் உள்ள ஏரியில், அணைக்கரையிலிருந்து வடவாறு ஏரி வழியாக 72 கனஅடி நீர்வரத்து உள்ளது.

இப்பகுதியில் உள்ள வீராண ஏரி கரையோரம் உள்ள ஷெட்டர் பழுதடைந்து நீர் வெளியேறுவதால் புடையூர், சோழத்தரம், வட்டத்தூர், குடிகாடு பகுதிகளில் அறுவடை செய்யும் நிலங்களில் உள்ள நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களில் வீராணம் ஏரியின் தண்ணீர் புகுந்துள்ளது. அறுவடை செய்யப்படும் நிலையில் உள்ள நெற்பயிர்களில் கடந்த ஒரு வாரம் காலமாக தண்ணீர் புகுந்து விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் இங்கிருந்து தண்ணீர் வடியவில்லை என்றால் பயிர்கள் அனைத்தும் நீரில் சாய்ந்து அழுகி விடும். அறுவடையே செய்ய முடியாத நிலைக்கு சென்று விடும்.  

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ``வீராணம் ஏரி கரை ஓரமாக உள்ள ஷெட்டர் பழுதடைந்துள்ளதால் அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் வட்டத்தூர், சோழத்தரம், பு.குடிகாடு ஆகிய பகுதி விளை நிலங்களில் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பழுதடைந்த ஷெட்டர் சரிசெய்யப்படாமல் இருந்தால் நெல், கரும்புகள் உள்ளிட்ட பயிர்கள் அனைத்தும் விவசாயிகள் கண் முன்னே நீரில் அழுகி போகும் நிலை ஏற்படும். எனவே,கலெக்டர் வீராணம் ஏரியை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும்’. என்று அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: