9 ஆண்டாக நீடிக்கும் அவலம்: திண்டிவனம் சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு விரைவில் இழப்பீடு

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம், கொள்ளார் உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு புறம்போக்கு நிலங்கள் போக சுமார் 720 ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் வீட்டுமனைகள் 2010ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதில் கொள்ளாரில் 197.46 ஏக்கரும், பெலாக்குப்பத்தில் 4 88.74 ஏக்கரும் ,வெண்மணியாத்தூரில் 34.6.ஏக்கர் நிலம் ஆக மொத்தம் 720 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. இதனையடுத்து 2011-ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு சிப்காட் தொழிற்பேட்டை தி.மு.க. அரசின் திட்டம் என்பதால் இந்த திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டாமல் கிடப்பில் போட்டது. இதற்கான உள்கட்டமைப்பு பணிகளையும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த 1.8.2014 -ல் நில மதிப்பீடு செய்ய அப்போதைய மாவட்ட ஆட்சியர் சம்பத் தலைமையில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்டு அவர்களின் விருப்பப்படி இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக கூறி நில உரிமை யாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி கருத்துக்களை பதிவு செய்து சென்றவர்கள் கடந்த 24-3-2015 அன்று முதல் 30-5-2015 வரையில் நில உரிமையாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவதாக கூறி நில உரிமையாளர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து நில உரிமையாளர்கள் 2500 பேர் ஆட்சேபனைக் கடிதம் அனுப்பினார்கள். இந்நிலையில் அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடுத் தொகையான ஏக்கருக்கு மூன்று லட்சம் ரூபாயை ஒரு சிலர் மட்டுமே பெற்றுக் கொண்டனர். மீதி உள்ள விவசாயிகள் இழப்பீடுத்தொகை குறைவாக இருப்பதாகக் கூறி வாங்க மறுத்து விட்டனர்.

இந்நிலையில் கடந்த 20-9-2017 அன்று திண்டிவனம் சிப்காட் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரியிலிருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதால் விவசாயிகள் எதிர்ப்பார்க்கும் அதிக தொகைக்கு மாறாக குறைந்த அளவு தொகையே வழங்கப்படும் என்று சிப்காட் அதிகாரிகள் சார்பில் அறிவித்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிப்காட் நிறுவனத்துக்கு விவசாயிகள் கொடுத்த மனுவின் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது சம்மந்தமாக கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் சிப்காட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 720 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களுக்கு இழப்பீடுத் தொகையை விரைந்து வழங்குவதுடன் சிப்காட் தொழிற்பேட்டையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று மயிலம் திமுக எம்எல்ஏ டாக்டர் மாசிலாமணி சட்டமன்றத்தில் பேசினார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் நடைபெற்ற தொழில்துறை சம்மந்தமான கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் போது திண்டிவனம் பகுதியில் சிப்காட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள 720 ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும் என பேசியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி செலவு உள்ளிட்ட எதற்காகவும் நிலத்தை அடகு வைக்கவோ, விற்பனை செய்யவோ முடியாத நிலை உள்ளது. இது சம்மந்தமாக சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது அரசு அதிகாரிகள் தரப்பில் மறு உத்தரவு வந்தால் தான் இதுபற்றி கூற முடியும் என்றார். எனவே சம்மந்தப்ட்ட நிர்வாகம் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நில உரிமையாளர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என திண்டிவனம் சிப்காட் நில உரிமையாளர்கள் சங்க தலைவர் ஏழுமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: