பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த 1000 ரூபாயை 6 லட்சம் பேர் வாங்கவில்லை: ரேஷன் கடைகளில் இனி கிடைக்குமா?

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணத்தை சுமார் 6 லட்சம் பேர் இதுவரை வாங்கவில்லை. பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில், இனி அவர்களால்  ரேஷன் கடைகளில் பணம் வாங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. அறிவித்தபடி, கடந்த 7ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்  ரூ.1000 வழங்கப்பட்டது.இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.1000 வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வசதி படைத்தவர்களுக்கு  பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 10ம் தேதி ரேஷன் கடைகளில் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த பிரச்னை குறித்து, தமிழக அரசு நீதிமன்றத்தை  மீண்டும் நாடியது. பின்னர், மீண்டும் ரூ.1000 வழங்க தடை இல்லை என்று நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் கடந்த 12ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பணம் வழங்கப்பட்டது.

அரசு அறிவித்தபடி, கடந்த 7ம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14ம் தேதி (திங்கள்) வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000  வழங்கப்பட்டது. நேற்று முன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை ஆகும். இதனால், பொங்கல் பணம் யாருக்கும் வழங்கப்படவில்லை.தமிழக அரசு அறிவித்துள்ள தலா ரூ.1000 பணத்தை ரேஷன் கடைகளில் இதுவரை 97 முதல் 98 சதவீதம் பேர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மொத்தமுள்ள 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 1  கோடியே 96 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வாங்கியுள்ளனர். சுமார் 6 லட்சம் பேர் இன்னும் வாங்கவில்லை. இவர்களுக்கு பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ரூ.1000 கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன் கூறும்போது, “பொங்கல் சிறப்பு பணமாக ரூ.1000 வாங்காதவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் வாங்கிக் கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

இதுபற்றி ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, “ஒவ்வொரு ரேஷன் கடைகள் மூலம் 97 சதவீதம் முதல் 98 சதவீதம் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்பட்டுள்ளது.

உணவு வழங்கல் உதவி ஆணையர்கள்,  எங்களிடம் இருந்து உத்தரவு வரும் வரை யாருக்கும் இனி ரூ.1000 பணம் வழங்க வேண்டாம் என்று கடந்த 14ம் தேதி மாலை உத்தரவிட்டுள்ளனர். இப்படி இருக்கும்போது அமைச்சர் ஒரு தகவலை கூறியுள்ளார். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் அதிகாரிகள் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் கேட்க முடியும். இன்று காலை ரேஷன் கடைகளின் உயர் அதிகாரிகள் என்ன  சொல்கிறார்களோ அதன்படியே, ரூ.1000 பணம் பெறாதவர்களுக்கு பணம் வழங்கப்படுமா? வழங்கப்படாதா? என்பது குறித்து முடிவு செய்ய முடியும்” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: