ஆக்கிரமிப்பு கட்டிட விவகாரத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: ஆக்கிரமிப்பு கட்டிட விவகாரத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் சென்னீர்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த என்.ராம்குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களின் நிலங்களுக்கு பட்டா வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத் ஆஜராகி, மனுதாரர்களின் கோரிக்கை மீது விசாரணை நடத்தப்பட்டு 2018 டிசம்பர் 28ம்தேதி இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் மனுதாரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்றும், அவர்கள் பட்டா கோர முடியாது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:

இதுபோன்ற வழக்குகளில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலொழிய மனுதாரர்களின் முறையீடுகளை அதிகாரிகள் வழக்கு நிலுவையில் உள்ளதாக காரணம் காட்டி முடித்துவைக்க கூடாது. அப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் கடமை தவறியுள்ளதாக கூறி அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் தொடர்பாக தவறான தகவலை நீதிமன்றத்தில் தந்தாலும் அந்த அதிகாரி கடமையைச் செய்ய தவறிவிட்டார் என்றே கருத வேண்டும். எனவே, இது குறித்து வீட்டுவசதி மற்றும் நகரமைப்பு துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், நகர நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நகர நிர்வாக ஆணையர், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ஆகியோர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். குறைந்த அளவு தண்ணீர் இருப்பு இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு தரும் மின்சாரம் மற்றும் குடிநீர் சப்ளையை ரத்து செய்துவிட்டால் அதை மற்றவர்கள் பயன்படுத்த முடியும் என்பதை சொல்வது இந்த வழக்கில் பொருத்தமாக இருக்கும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: