தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் : திருவாரூர்-நாகை வரையிலான ஏல அறிவிப்பு வெளியீடு!

திருவாரூர் : தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான மற்றொரு ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எரிவாயு எடுக்க மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டிருந்தது. அப்போது ஓஏஎல்பி பிரிவில் நாடு முழுவதும் 55 இடங்களுக்கு ஏலம் விடப்பட்டது. அதில் தமிழகத்திலுள்ள 3 இடங்களும் இடம் பெற்றிருந்தன. அவற்றில் இரு இடங்களை வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தை ஒ.என்.ஜி.சி நிறுவனமும் ஏலத்தில் எடுத்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். விளை நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கடல் பகுதியே ஏலம் விடப்பட்டுள்ளதால் பாதிப்பு இருக்காது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஏற்கனவே ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில் ஓஏஎல்பி பிரிவில் இரண்டாம் சுற்று ஏலத்தை ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காரவாக்கல் முதல் நாகை மாவட்டம் காரியப்பட்டினம் வரை சுமார் 244 சதுர கிமீ அளவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கஜா புயல் பாதிப்பில் இருந்தே இதுவரை மீளாத நிலையில் தற்போது ஹட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: