3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு: விரைவில் விசாரணை

சென்னை: மூன்று ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு, தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998ம் கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் என்ற  கிராமத்தில் 150க்கும் மேற்பட்டோருடன் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளார். அந்த போராட்டத்தில் போலீஸ் ஜீப்புக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாகலூர் போலீசார் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டது. பாலகிருஷ்ணா ரெட்டி எம்.எல்.ஏ என்பதால் போலீஸ் ஜீப்  எறிக்கப்பட்ட வழக்கு இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ₹10500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர்  பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு செய்ய இருப்பதால் சிறை செல்வதை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரப்பை  ஏற்படுத்தியது. தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பாலகிருஷ்ணா ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தநிலையில் பாலகிருஷ்ணா ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு  தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்கவில்லை, தங்களை முறையாக விசாரிக்க வில்லை, தாங்கள் கேட்ட ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை, இந்த வழக்கு கிருஷ்ணகிரி  மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் அங்கே வழக்கு நடைபெற்ற குறிப்பையும் வழக்கறிஞரின் முந்தைய வாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும்  வாய்பளிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: