தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சிலைகளை டெல்லிக்கு கொண்டு செல்ல மத்திய தொல்லியல் துறை திட்டம்!

தஞ்சை : கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் கோயிலுக்கு சொந்தமான பழங்கால சிலைகளை டெல்லிக்கு எடுத்துச் சென்று பிரதமர் அலுவலகத்தில் வைக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. டெல்லி அருங்காட்சியகத்திற்கு சில சிலைகளை எடுத்துச் செல்லவும் நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் 2005ம் ஆண்டு பழுது நீக்கும் பணி தொடங்கப்பட்டது. இதனால் தாராசுரம் கோயிலில் இருந்த 24 சிலைகள் தஞ்சாவூர் மத்திய தொல்லியல் துறை பராமரிப்பு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. 14 ஆண்டுகளாக சிலைகள் இந்த அலுவலகத்தில் இருந்து வரும் நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் தஞ்சை வந்த மத்திய தொல்லியல் துறை தலைமை அதிகாரி சிலைகளை பார்வையிட்டார்.

அலுவலகத்தில் இருந்த அழகிய கலை வேலைப்பாடுகள் நிறைந்த சிலைகளை கண்டு ஆச்சரியமடைந்த அவர், இந்த சிலைகளை பிரதமர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக தஞ்சை அலுவலகத்தில் உள்ள சிலைகளை ரசாயணம் போட்டு சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாடு மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளும் அலுவலகத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். டெல்லியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் இந்த சிலைகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மீதமுள்ள சிலைகளை டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை பெரிய கோயிலை வைணவ கோயிலாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தாராசுரம் கோயில் சிலைகளை டெல்லி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2005ம் ஆண்டு கோயில் சிலைகளை தஞ்சை அலுவலகத்திற்கு கொண்டு வந்தது குறித்து தமிழக அரசுக்கு தகவல் அளிக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசுக்கு தகவல் அளிக்காமல் சிலைகளை டெல்லிக்கு கொண்டு செல்வது குறித்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய தமிழ்தேசிய பேரியக்கத் தலைவரான மணியரசன், சிலைகளை கொண்டு செல்ல மத்திய தொல்லியல் துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறியுள்ளார். தெய்வ சிலைகள் எல்லாம் டெல்லிக்கு அலங்காரப் பொருட்களா என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழ் கலாச்சாரத்தின் மீதான மத்திய அரசின் படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக ஆன்மீகத்தை மத்திய அரசு சிதைத்து வருவதாகவும், தொல்லியல் துறை என்பது சிலைகளை காக்கும் துறை, கடத்தல் துறையல்ல என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தாராசுரம் கோயில் சிலைகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டால், தமிழகத்தை விட்டு மத்திய தொல்லியல் துறை வெளியேறுமாறு போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: