எச்ஏஎல்.லுக்கு 1 லட்சம் கோடிக்கு ஆர்டரா? நாடாளுமன்றத்தில் நிரூபிக்காவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் சவால்

புதுடெல்லி: ‘‘எச்ஏஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொடுத்துள்ளதாக கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் இன்று  தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என ராகுல் கூறியுள்ளார்.ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான குறுகிய நேர விவாதம், மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அதற்கு பதிலளித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘எச்ஏஎல் திறனை மேம்படுத்த  காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை. பாஜ தலைமையிலான மத்திய அரசு, அந்த நிறுவனத்துக்கு ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்களை கொடுத்துள்ளது’ என கூறினார். எச்ஏஎல் நிறுவனத்தின் மூத்த நிர்வாக அதிகாரி ஒருவர் இதை மறுத்தார். ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘எச்ஏஎல் நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒரு ஆர்டரும் வழங்கவில்லை. ₹1 லட்சம் கோடியில் ஒரு  ரூபாய் கூட வரவில்லை’’ என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு பொய்யை சொல்லும்போது, அதை மறைக்க பல பொய்களை சொல்ல வேண்டியுள்ளது. ரபேல் விவகாரத்தில்  பிரதமர் கூறிய பொய்யை மறைக்கும் ஆர்வத்தில், நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் பொய் சொல்லி இருக்கிறார். எச்ஏஎல் நிறுவனத்துக்கு ₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ள அவர்,  அதற்கான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.  காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப்  சுர்ஜிவாலா டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘பாதுகாப்பு அமைச்சரின் பொய்கள் அம்பலமாகி உள்ளன. ஒரு ஒப்பந்தம் கூட கையெழுத்தாகவில்லை என எச்ஏஎல் நிறுவனம் கூறியுள்ளது. அது, தனது ஊழியர்களுக்கு சம்பளம்  கொடுக்க முதல் முறையாக ₹1,000 கோடி கடன் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

‘ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’

ராகுல் குற்றச்சாட்டுக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நாட்டை காங்கிரஸ் தலைவர் தவறாக நடத்துவது வெட்கக்கேடு. கடந்த 2014 முதல் 2018 வரை ₹26,570.8 கோடி  மதிப்பிலான ஒப்பந்தங்களில் எச்ஏஎல் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. ₹73 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை முடிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றன. தவறான தகவல் கொடுத்ததற்காக ராகுல் மன்னிப்பு  கேட்பாரா?’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: