உலக திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக தஞ்சையில் இருந்து மலேசியா புறப்பட்ட திருவள்ளுவர் சிலை

தஞ்சை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவுள்ள உலக திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக தஞ்சையில் இருந்து திருவள்ளுவர் சிலையை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் வழியனுப்பி வைத்தார். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் உலக திருக்குறள் மாநாடு பிப்ரவரி 22ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். மாநாட்டில் திருவள்ளுவர் சிலை வைக்கப்படவுள்ளது. இதற்காக 2 லட்சம் மதிப்பில் தஞ்சை தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் கன்னியாகுமரியில் இரண்டரை அடி உயரம், 920 கிலோ எடை கொண்ட கருங்கற்சிலை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவள்ளுவர் சிலை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வந்தது. அந்த சிலையை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பதிவாளர் முத்துக்குமார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித்துறை பேராசிரியர் குறிஞ்சிகந்தன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வழியனுப்பி வைத்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் சென்று தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள தமிழ்த்தாய் அறக்கட்டளை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுத்தி வைக்கப்படும். இதைதொடர்ந்து இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருச்சி, உளுந்தூர்பேட்டை வழியாக சென்னை செல்கிறது. நாளை (4ம் தேதி) சென்னையில் இருந்து கப்பல் மூலம் மலேசியா செல்கிறது.

இதுகுறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளை பொது செயலாளர் குணா கூறியதாவது: தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் இதுவரை 7 திருவள்ளுவர் சிலையை மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு கொடுத்துள்ளோம். மத்திய அமைச்சர் தருண் விஜயிடமும் திருவள்ளுவர் சிலையை கொடுத்துள்ளோம். தற்போது மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவுள்ள உலக திருக்குறள் மாநாட்டில் வைப்பதற்காக 2 லட்சம் மதிப்பில் இரண்டரை அடி உயரத்தில் 920 கிலோ எடையில் கருங்கல்லால் திருவள்ளுவர் சிலையை செய்துள்ளோம். இந்த சிலை கன்னியாகுமரியில் ஒரு சிற்ப கூடத்தில் செய்யப்பட்டதாகும். இந்த சிலை தஞ்சையில் இருந்து இன்று புறப்பட்டு நாளை (4ம் தேதி) சென்னை செல்கிறது. அங்கிருந்து கப்பல் வழியாக மலேசியா சென்றடையும். பின்னர் மாநாடு நடைபெறும் இடத்தில் தொடர்ந்து 3 நாட்கள் இந்த திருவள்ளுவர் சிலை இருக்கும். மாநாடு முடிந்தவுடன் இந்த சிலை அவர்களிடமே ஒப்படைக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: