திருவனந்தபுரம்: பிரபல மலையாள இளம் நடிகை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பல்சர் சுனில் தலைமையிலான கும்பல் கடந்த 2012ம் ஆண்டில் ஒரு மூத்த நடிகையையும் கடத்தி ஆபாச படம் எடுக்க திட்டமிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.பிரபல தமிழ் முன்னணி நடிகையின் தாயான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார். இளம் நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பல்சர் சுனில் கைது செய்யப்பட்டபோது, இந்த மூத்த நடிகையும் கொச்சி போலீசில் புகார் செய்தார். அதில் கடந்த 2012ம் ஆண்டு தன்னையும் பல்சர் சுனில் தலைமையிலான கும்பல் கொச்சி ரயில் நிலையத்தில் வைத்து படப்பிடிப்புக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்த முயற்சித்ததாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்சர் சுனிலை கைது செய்தனர்.