கூட்ட நெரிசலை பயன்படுத்தி திற்பரப்பு அருவியில் பெண்களிடம் அத்துமீறும் கும்பல்: கூடுதல் காவலர்கள் நியமிக்க வலியுறுத்தல்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்தபடியாக அதிக பயணிகள் வந்து செல்லும் சுற்றுலா மையமாக திற்பரப்பு அருவி உள்ளது. மேற்கு ெதாடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு திற்பரப்பு பகுதியில் அருவியாக விழுவதால், இங்கு குறிப்பிட்ட சீசன் என்றில்லாம் எல்லா காலங்களிலும் தண்ணீர் விழும். இதனால் தினமும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் தினமும் காலையில் இருந்தே பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பிற்பகல் நேரங்களில் வாகனங்கள் திற்பரப்பு சந்திப்பை கடந்து செல்ல முடியாமல் மெயின் ரோட்டின் இரு பக்கமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். பயணிகள் அங்கிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் நடந்து அருவிக்கு செல்ல வேண்டும்.

அதிக வாகனங்கள் வருவதாலும், வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லாததாலும் சாலை பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.  இந்த கூட்ட நெரிசலை பயன்டுத்தி சொகுசு கார்களை உடைத்து திருடுவது, பெண்களிடம் அத்துமீறுவது, பிக்பாக்கெட், செயின்பறிப்பு போன்ற சம்பவங்கள் தினமும் நடக்கிறது. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் திற்பரப்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சில போலீசார் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் வாகன நெருக்கடியை ஒழுங்குபடுத்துவோ, கூட்ட நெரிசலில் அத்துமீறுபவர்களை தடுக்கவோ முடியவில்லை. அருவி பகுதியில் திற்பரப்பு பேரூராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் 3 பேர் மட்டும் பணியில் உள்ளனர். இவர்கள் எல்லை மீறுபவர்களை அவ்வப்போது விரட்டி விடுவது, போதையில் தகராறில் ஈடுபடுபவர்களை விரட்டுவது என பணியாற்றுகின்றனர். ஆனால் கூட்டம் அதிகம் என்பதால் இவர்களால் அந்த கும்பலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்றும் காலை முதலே கூட்டம் களைகட்டியது.  மதிய நேரத்தில் வெயில் கொளுத்திய நிலையில் ஆயிரக்கணக்கானோர் அருவியில்  நீராடி மகிழ்ந்தனர். பயணிகள் குளிக்கும் பகுதியில் நெரிசல் ஏற்பட்டதால் பெண்கள்  குளிக்கும் இடத்திலும் ஆண்கள் குளித்தனர். அப்போது போதையில் வந்த கும்பல்  பெண்கள் முன்னிலையில் அநாகரிக செயல்களில் ஈடுபட்டனர். அங்கிருந்த காவலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர். போதையில் தள்ளாடியபடி வந்த அந்த கும்பல் வாகனத்தை எடுக்கும் போது அந்த கும்பலுக்கும், மற்ற பயணிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதை பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதி மக்கள் அந்த கும்பலை சுற்றிவளைத்து குலசேகரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் இதுேபான்ற சம்பவங்கள் தெடர்ச்சியாக நடந்து வருவது பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை ஏற்படுத்தி வருகிறது. எனவே திற்பரப்பு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். கூட்டம் அதிகமான நாட்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: