கொடைக்கானல் : விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். வாகன நெரிசலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை கிடைத்துள்ளதால் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். அரையாண்டு தேர்வு விடுமுறையுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களும் வர இருப்பதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகின்றனர்.
கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். சுற்றுலாப்பயணிகளின் வருகை இந்த வாரம் முழுவதும் அதிகளவில் இருக்கும் என்று கொடைக்கானல் பகுதி வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் எதிர்பார்த்துள்ளனர். இரு தினங்களாக மேக மூட்டத்துடன் காணப்பட்ட கொடைக்கானலில் நேற்று காலை முதல் நல்ல வெயில் அடித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை வேளையில் கடுங்குளிர் நிலவி வருகிறது. மாறுபட்ட இந்த காலநிலையை கொடைக்கானல் வந்த சுற்றுலாப்பயணிகள் அனுபவித்துச் செல்கின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம்: போலீசார் எச்சரிக்கைகொடைக்கானலில் உரிய அனுமதியின்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென போலீசார் எச்சரித்துள்ளனர்.‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதிகளில், ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடத்தப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காகவே, அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலுக்கு வருகின்றனர். பல தனியார் ஓட்டல்கள் முன் அனுமதி பெறாமல் கூடுதல் கட்டணங்களை வசூல் செய்து, புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் கூறுகையில், ‘‘புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த உள்ள தனியார் விடுதிகள், ஓட்டல்கள், கொடைக்கானல் காவல்துறையிடம் உரிய அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி