5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடு தேடி சென்று ஆதார் அட்டை வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி துவக்கிவைப்பு

சென்னை: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், பொதுமக்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் நிரந்தர ஆதார் எண் பதிவு செய்யும் வசதியையும் முதலமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.

அதற்காக ரூ.13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், கைக்கணினிகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் உள்ளடக்கிய 1302 ஆதார் கிட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த ஆதார் கிட்கள் 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கு அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி உள்ளிட்டவைகளை முதலமைச்சர் வழங்கியுள்ளார். மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப்பட்ட கைப்பேசி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

இதன்மூலம், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தையின் முதல் 1000 நாட்களை கண்காணித்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற அனைத்து வகையான பதிவுகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். அதுமட்டுமல்லாது, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதேபோல் திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், வேலூரில் உள்ள ஆம்பூர், திருச்சி மாவட்டம் முசிறி, சென்னை ஆர்.கே.நகர் ஆகிய நகரங்களில் போக்குவரத்து துறை கட்டடங்களை திறந்து வைத்தார்.

கோவை, ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தையும், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தையும் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சரோஜா, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: