உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பி.வி.சிந்து

குவாங்ஸோ: உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பேட்மிண்டன் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்  உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரை இறுதியில், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின் ராட்சனோக் இன்டானோனுடம் மோதினார்.

இதில் பி.வி.சிந்து 21-16, 25-23 என்ற நேர்செட்டில் இன்டானோனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த போட்டியில் சிந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டியை எட்டினார். இதன் இறுதிப் போட்டி இன்று நடந்தது. இதில், ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். முன்னாள் உலக சாம்பியனான இவரும் சிந்துவும் இதுவரை 12 முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா 6-ல் வெற்றி பெற்றிருந்தனர்.  

இந்நிலையில் இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜப்பானின் ஓகுஹராவை 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்திய  பி.வி.சிந்து சாம்பியன் படத்தை தட்டிச்சென்றார். இந்த தொடரில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்பு ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றிருக்கிறார் சிந்து. இதுவரை 10 உலக தொடர்களில்  பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: