வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடியவிடிய சோதனை

அம்பத்தூர்: வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 9 மணி நேரம் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் வராத ₹70 ஆயிரம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

 அம்பத்தூர் அடுத்த கொரட்டூர்,  சாந்தி நகர், 2வது தெருவில் வில்லிவாக்கம் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வில்லிவாக்கம், கொன்னூர், மல்லிச்சேரி உள்ளிட்ட பகுதி மக்கள் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, திருமண பதிவு உள்ளிட்ட தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் இரவு நேரங்களில் அதிகாரிகள் துணையுடன் புரோக்கர்கள் பத்திரப்பதிவு செய்வதாக சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதன்பேரில், நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் லவக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். இதனை பார்த்த சில புரோக்கர்கள் உள்ளே இருந்து வெளியே தப்பினர்.  ஆனால், லஞ்ச ஒழிப்பு போலீசார், சில புரோக்கர்களை வெளியே விடாமல் கதவை பூட்டிக் கொண்டனர். பின்னர், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் புரோக்கர்களிடம் தனித்தனியாக சோதனை செய்தனர். இதையடுத்து, சில அதிகாரிகள், புரோக்கர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்காமல் இருக்க பணத்தை அலுவலகத்துக்கு உள்ளேயே அங்குமிங்குமாக வீசினர்.

இதனை அடுத்து, சார்பதிவாளர் கோபால கிருஷ்ணனிடம் ேபாலீசார்  கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனை நள்ளிரவு 2.30 மணி வரை நடந்தது.    இதில், அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 70,600 மற்றும் முக்கிய ஆவணங்களை  போலீசார் பறிமுதல் செய்தனர். சார்பதிவாளர் அலுவலகத்தில் 9 மணி நேரம் நடந்த சோதனையால் கொரட்டூரில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கூறுகையில், ‘‘சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரிகளும், ஊழியர்களும் புரோக்கர்களுடன்  சேர்ந்து முறைகேடாக பத்திரப்பதிவில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளோம். மேலும், விசாரணைக்கு தேவைப்பட்டால் சார்பதிவாளர்  உள்ளிட்ட ஊழியர்கள் நேரில் ஆஜராக கூறியுள்ளோம்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: