அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உடைந்த நிழற்குடைகளால் பயணிகள் தவிப்பு: வெயில், மழையில் சிரமம்

அம்பத்தூர்: அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, பால் பண்ணை பகுதியில் உள்ள நிழற்குடைகள் உடைந்துள்ளதால் மழை, வெயில் காலங்களில் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, வடக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் கம்பெனிகள் உள்ளன. இவற்றில் பணியாற்ற சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கம்பெனிக்கு மாநகர பஸ்களில் வேலைக்கு வந்து செல்கின்றனர். இப்பகுதியில் அரசின் ஆவின் பால் பண்ணை நிறுவனம் உள்ளது. இங்கும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தனியார் கம்பெனிகள், பால் பண்ணையில் பணியாற்றும் தொழிலாளர்கள் வந்து செல்ல பேருந்து நிறுத்தம் ஆவின் பால் பண்ணை மற்றும் தொழிற்பேட்டை பகுதியில் உள்ளது. இங்கு, சில ஆண்டுகளுக்கு முன் இரும்பு தகடு மூலம் நிழற்குடைகள் சாலையின் இரு புறமும் அமைக்கப்பட்டது. இதை சிட்கோ நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மேற்கூரை உடைந்து காணப்படுகிறது. இதனால், பயணிகள் வெயில் மழையில் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழற்குடைகளில் மின் விளக்கு மற்றும் மேற்கூரை உடைந்துள்ளது. வெயில், மழைக்காலங்களில் நிழற்குடையினுள் தண்ணீர் ஒழுகுவதால் உள்ளே நிற்க முடியவில்லை. மின் விளக்குகள் பழுதால், இரவு நேரங்களில் பெண் பயணிகள் தனியாக வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

இதை பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன், பணம் பறிப்பது போன்ற செயல்களில் சமூக விரோதிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். பெண் பயணிகளிடம் சில நேரத்தில் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சமூக விரோத கும்பலுக்கு பயந்து, போலீசில் புகார் அளிக்க முன்வருவது இல்லை. இதனால் அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் புகார் தெரிவித்தாலும் அவர்கள் குறித்து சரியான தகவல்களை பாதிக்கப்பட்டோர் தெரிவிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தங்களில் இருக்கை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பேருந்துக்காக கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து தொழிற்சங்கங்கள் சார்பில், தொழிற்பேட்டை சிட்கோ அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடைகளின் உடைந்த மேற்கூரை, மின்விளக்குகளை சீரமைக்கவும், இருக்கை வசதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: