நீலகிரியில் 40 ஆண்டுகளுக்கு பின் உருளைக்கிழங்கு அறுவடையில் களம் இறக்கப்பட்ட உழவு மாடுகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 40 ஆண்டுக்கு பின் உருளைக்கிழங்கு அறுவடையில் உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. டீசல் விலை உயர்வால் அதிகமாகும் டிராக்டர் வாடகை காரணமாக நவீன இயந்திரங்களை விவசாயிகளை தவிர்க்க தொடங்கி உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நீலகிரி காய்கறி தோட்டங்களில் உழவு செய்வதற்காகவே உழவு மாடுகள் வளர்க்கப்பட்டன. விவசாயிகள் அவர்களது தோட்டங்களில் உழவு பணிகளை மேற்கொள்ள இதனை பயன்படுத்தினர். ஆனால், காலப் போக்கில் விவசாயிகள் உழவு மாடுகளை வளர்ப்பதை குறைத்துக் கொண்டனர். ஒரு காலத்தில் நீலகிரி தோட்டங்களில் உழவு மாடுகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

மேலும், டிராக்டர் மற்றும் டிரில்லர் போன்ற இயந்திரங்கள் வந்ததால், கிராமப்புறங்களில் மாட்டு வண்டிகள், விவசாயத்திற்காக பயன்படுத்தி வந்த உழவு மாடுகள் பெருமளவில் குறைந்தது. இந்நிலையில், தற்போது டீசல் விலை உயர்வால், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் டிரில்லர் மற்றும் டிராக்டர் வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் விவசாயிகள் உழவு மாடுகளை வாடகைக்கு எடுத்து காய்கறி உழவு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, உருளைக்கிழங்கு அறுவடையில் அதிகளவு உழவு மாடுகள் பயன்படுத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் எங்கும் உழவு மாடுகள் இல்லாத நிலையில், தற்போது கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிகளில் இருந்து உழவு மாடுகள் அழைத்து வரப்படுகின்றன. இதற்கு ஒரு நாளுக்கு ரூ.2 ஆயிரம் வாடகையாக வழங்கப்படுகிறது. இந்த மாடுகள் 10 ஆட்கள் நான்கு நாட்கள் செய்யும் வேலையை ஒரே நாளில் முடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அறுவடை காலம் குறைவது மட்டுமின்றி, செலவும் மிகவும் குறைவு என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஊட்டி அருகேயுள்ள பெர்ன்ஹில், தும்மனட்டி, அணிக்கொரை மற்றும் கப்பச்சி போன்ற பகுதிகளில் தற்போது உழவு மாடுகள் மூலம் உருளைக்கிழங்கு அறுவடை செய்யப்படுகிறது.

விலை சரிவு விவசாயிகள் கவலை

நீலகிரியில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு 45 கிலோ  மூட்டை  ஒன்று  கடந்த மாதம் வரை ரூ.1600 வரை விலை போனது. அதாவது கிலோ ஒன்று ரூ.50  முதல் 60 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது வட  மாநிலங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு அதிகளவு  கொண்டு வரப்படுகின்றன. இந்த கிழங்கு விலை ஊட்டி கிழங்கை காட்டிலும் மிகவும்   விலை குறைவு. கிலோ ஒன்று ரூ.15 முதல் 20 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால்,  ஊட்டி கிழங்கை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால்,  உருளைக்கிழங்கு விலை படிப்படியாக குறைந்து தற்போது மொத்த மார்க்கெட்டில்  கிலோ ஒன்று ரூ.15 முதல் 20 வரையே விலை போகிறது. 45 கிலோ மூட்டை ஒன்று  அதிகபட்சமாக ரூ.800 முதல் ரூ.900 ஆயிரம் வரையே விற்பனையாகிறது. இதனால்  நீலகிரி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: