‘கஸ்தூரிபா காந்தி’ அரசு மருத்துவமனையில் 5.2 கிலோ ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது

சென்னை: தமிழகத்தில் முதன் முறையாக சென்னை திருவல்லிக்கேணி ‘கஸ்தூரிபா காந்தி’ மருத்துவமனையில், ஜெய என்பவருக்கு சுகப்பிரசவத்தில், 5.2 கிலோ எடையில் அழகான குழந்தை பிறந்தது.

சென்னை, சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரேஸ் குமார் குப்தா (35). இவரது மனைவி ஜெய (35). இவர்களுக்கு, 10 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் இரண்டாவது பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூர்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு சுகப்பிரசவத்தில் 5.2 எடையில் ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் குழுவினர் குழந்தையை கண்காணித்து வருகிறனர்.

சமீபகாலமாக தமிழகத்தில் பாரம்பரிய  உணவுக்கு பலர் ‘குட்பை’ சொல்லியிருப்பதால் பெரும்பாலான தாய்மார்களுக்கு சிசேரியன்  முறையிலேயே பிரசவங்கள் நடக்கிறது. தற்போது சத்து நிறைந்த பாரம்பரிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விஜயா கூறியதாவது: இந்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. சுகப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை, 3.9 கிலோ எடை இருந்தது. இரண்டாவது குழந்தை, 4.5 கிலோ எடை இருக்கும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால், குழந்தை, 5.2 கிலோ எடை கொண்டதாக இருந்தது.

தாய் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்ததால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருக்கின்றனர். இந்த மருத்துவமனையில் முதல் முறையாக சுகப்பிரசவத்தில், 5.2 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில், 4.8 கிலோ எடையில் குழந்தை பிறந்தது.

பெரும்பாலும் தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தால் குழந்தை அதிக எடையில் பிறக்கும். ஆனால், இந்த பெண்ணுக்கு அப்படி எந்த பிரச்னையும் இல்லை. குழந்தை எடை அதிகமாக இருப்பதால் தாய் பால் அதிகமாக குடிக்கும். தாயிடம் பால் குறைவாக இருந்தாலும், இங்கு தாய்பால் வங்கி உள்ளது.  இதன் மூலம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் கொடுக்கப்படும். டாக்டர்கள் கண்காணிப்பில் குழந்தை உள்ளது. கர்ப்ப காலத்தில் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்கள் எல்லாத்துறையிலும் இருக்கின்றனர். தற்போது பெற்றோர் பெண் குழந்தைகளையே விரும்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் முதல் முறை

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை வேளச்சேரி அடுத்த மேடவாகத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதா என்பவருக்கு சிசேரியன் மூலம் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக சுகப்பிரசவத்தில் 5.2 கிலோ எடையில் குழந்தை பிறந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் குழந்தை 4 கிலோ எடைக்கு மேல் இருந்தாலே சிசேரியன் தான் செய்ய வேண்டும். 5.2 கிலோ எடை குழந்தையை சுகப்பிரசவத்தில் பிறக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: