விளையாட்டு பயிற்சியில் மாணவி மயங்கி விழுந்து சாவு: எம்சிசி கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சென்னை: கட்டாயப்படுத்தி, மாணவியை விளையாடச் சொன்னதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவரது மகள் மஹிமா (18). இவர், கிழக்கு தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வந்தார்.  இந்நிலையில் கல்லூரியில் ஒவ்வொரு துறையை சேர்ந்த மாணவ, மாணவிகளும் கட்டாயமாக விளையாட்டில் பங்கேற்க ‘ஸ்போர்ட்ஸ் பார் ஆல்’ என்ற பெயரில் நடைபெறும் போட்டியில் கூடைப்பந்து விளையாடியபோது மாணவி மஹிமா மயங்கி விழுந்துள்ளார்.

அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடலை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு கொண்டுசென்றனர். இந்நிலையில் கல்லூரியில் கட்டாயமாக விளையாட்டில் பங்கேற்பதை தடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். சேலையூர் போலீசார் மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து மாணவி உடலை பிரேத பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என வேண்டுகோள் விடுத்தனர். பெற்றோர் சம்மதத்துடன் மாணவி மஹிமா உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த போலீசார் உடலை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் கட்டாய விளையாட்டை தடை செய்ய கோரிக்கை விடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் கட்டாய விளையாட்டு பயிற்சி ரத்து செய்யபடும் என்றும், வெள்ளிக்கிழமை இதுகுறித்து அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.   

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: