மேகதாது விவகாரம்: தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது

சென்னை: மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாளை மறுநாள் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள ஆணையம், இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து அளிக்குமாறு கடந்த 22-ந் தேதி கர்நாடக நீர்பாசனத்துறைக்கு உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது பற்றி தமிழகம் கேள்வி எழுப்பியது. இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழக பிரதிநிதிகள், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டதற்கு தங்களது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இந்நிலையில் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக வரும் 6-ம் தேதி (நாளை மறுநாள்) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது என சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   

காங்கிரஸ் கோரிக்கை:

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எச்.வசந்தகுமார், பிரின்ஸ், விஜயதாரணி, ராஜேஷ்குமார், கணேஷ், காளிமுத்து ஆகியோர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து பேசினர். அப்போது மேகதாது விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: