மேகதாது திட்ட விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு

டெல்லி: டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், மற்றும் காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது பற்றி தமிழகம் கேள்வி எழுப்பியது. இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள தமிழக பிரதிநிதிகள், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டதற்கு தங்களது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். அணைக்கான வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது தவறு எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அதிகாரம் உள்ளது என டெல்லியில் காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு பிரதிநிதி வாதம் செய்தார். தமிழக அரசின் எதிர்ப்பை நிராகரிக்க கர்நாடக அரசு பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். மேலும் மேகதாதுவில் அணை கட்டினாலும் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் தருவோம் எனவும் கர்நாடக அரசு பிரதிநிதி கூறியுள்ளார். மேகதாதுவில் கர்நாடகா தடுப்பணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமே பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய நீர் வள ஆணையத்தில் ஒப்புதல் பெற்று திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகா ஆயத்தமாகியுள்ளது. இந்நிலையில் மேகதாதுவில் தடுப்பணை கட்ட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவில் அதிக கனமழை கொட்டி வெளியேற்றப்படும் உபரிநீரையும் மேகதாதுவில் அணைகட்டி கர்நாடகா தேக்கி வைத்தால் டெல்டா மாதங்களுக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய 177 டி.எம்.சி. தண்ணீரும் கிடைக்காது, உபரிநீரும் வராது என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: