தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தமிழக போலீசார் மீது சிபிஐ வழக்குபதிவு

புதுடெல்லி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, தமிழக போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டது, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே மாதம் 22ம் தேதி 100ம் நாள் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை, துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார், அதிகாரமே இல்லாத வருவாய் துறை அதிகாரி உத்தரவின் பேரில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது எப்படி என்பது தொடர்பாக விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சிபிஐ தனது விசாரணையை தொடங்கியது. முதல் கட்டமாக, சட்ட விரோதமாக கூடுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 12 பிரிவுகளின் கீழ், 20 அமைப்புகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ 2வது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இம்முறை, அடையாளம் தெரியாத தமிழக போலீசார் மீதும், வருவாய் துறை அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு, ஒரு நபரை காயப்படுத்தும் நோக்கத்துடன் அரசு பணியாளர்கள் சட்டத்தை மீறி செயல்படுதல், தவறான ஆவணங்களை இணைத்தல் மற்றும் வழிப்பறி, அடிதடி, கிரிமினல் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: